பாகிஸ்தானுக்கு எதிரான வங்க தேச விடுதலைப் போரின்போது, அடிப்படைவாத கட்சியான ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான மோதியுர் ரஹ்மான் நிஸாமி பாகிஸ் தானுக்கு ஆதரவாக செயல்பட்ட தாகவும், பப்னா பகுதியில் தனது கிராமத்தில் 450-க்கும் அதிகமான வர்களை கொன்று குவித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில், நிஸாமிக்கு (72) கடந்த 2 மாதங் களுக்கு முன் வங்கதேச உச்ச நீதி மன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து மரண தண்டனையை நிறைவேற்றுவதற் கான ஆணை, நிஸாமியிடம் நேற்று வழங்கப்பட்டது.
அரசு தலைமை வழக்கறிஞர் மகபுபே ஆலம் கூறும்போது, “நிஸாமிக்கு 15 நாள் அவகாசம் உள்ளது. அவர் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுசீராய்வு கோரி மேல்முறையீடு செய்யலாம். அந்த கால வரம்புக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டாலோ, அவரது மனு நிராகரிக்கப்பட்டாலோ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர் தூக்கிலிடப்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-க்குப் பிறகு, ஜமாத் இ இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த மூவர் உட்பட நான்கு பேருக்கு போர்க்குற்றங்கள் தொடர்பாக மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.