போர்க் குற்றவாளியைக் கைது செய்யுங்கள் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சமூகச் செயற்பாட்டாளர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு கலிபோர்னியாவில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் போர் எதிர்ப்பு சமூகச் செயற்பாட்டளர் ஜெப் திடீரென எழுந்து வாக்குவாதம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், “உங்களுடைய போர் எனது குடும்பத்திற்குக் கெட்ட கனவை உருவாக்கியது. இராக் போரில் பத்தாயிரம் அமெரிக்கப் படைகளும், லட்சக்கணக்கான இராக்கியர்களும் கொல்லப்பட்டனர். நீங்கள் போரில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினீர்கள். நீங்கள் போர்க் குற்றவாளி. நீங்கள் கைது செய்யப்பட வேண்டும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து ஜெப் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இராக் போர்
இராக்கின் அதிபராக சதாம் உசேன் இருந்தபோது அவர் மனித உரிமைகளை மீறுகிறார் என்றும், சர்வாதிகாரியாகச் செயல்படுகிறார் என்றும் அந்நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இராக்கில் அமெரிக்காவின் போர் வரலாறு தவறாகவே மாறியது.
இந்த நிலையில் இராக்கிலிருந்து 2014-ம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். அங்கு ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது. இதையடுத்து ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க இராக் அரசு நடவடிக்கை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து இராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இதில் 2017ஆம் ஆண்டு போரில் வெற்றி பெற்றதாக இராக் அரசு அறிவித்தது. எனினும் நாட்டின் சில இடங்களில் தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் சண்டையிட்டு வருகின்றனர்.