உலகம்

காலநிலை மாற்றம்: கிரெட்டா தலைமையில் பிரமாண்ட பேரணி

செய்திப்பிரிவு

காலநிலை மாற்றத்தால் உலகம் இதுவரை சந்தித்திராத மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தின் பாதிப்பை உலக நாடுகளுக்கு உணர்ந்து வகையில், கிரேட்டா தன்பெர்க் தலைமையில் பிரமாண்ட பேரணி பெர்லின் நாடாளுமன்றத்தின் முன்பு நடைபெற்றது.

கிரேட்டா தலைமையில் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் துவங்கப்பட்ட இப்பேரணி, லண்டன், ரோம், ஐரோப்பாவின் பல நகரங்களிலும் நடைபெற்றது.

பெர்லினில் நடைபெற்ற கூட்டத்தில் கிரெட்டா தன்பெர்க் பேசியதாவது:

“ நாங்கள் மாற்றத்தைக் கோருகிறோம், நாங்கள் தான் மாற்றம்.காலநிலை மாற்றம் காணாமல் போய்விடவில்லை. உலகம் இதுவரை சந்தித்திராத மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது. இவ்வளவு அழிவுகளும் விரைவாக நடைபெறுவது கால நிலைமாற்றத்தால் நாம் எவ்வளவு பெரிய சிக்கலை சந்தித்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது”

இவ்வாறு தன்பெர்க் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் சுமார் 1,500 நகரங்களில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எடுத்துரைக்கும் பேராட்டங்கள் இளைஞர்கள் தலைமையில் நடத்தப்பட்டது.

யார் இந்த கிரெட்டா?

”இங்கு பருவநிலை கடுமையாகப் பாதிப்படைந்துவிட்டது. பூமியில் நாம் வெளிவிட்ட கரிம வாயுவினால் பூமியைப் பாதுகாத்து வந்த ஓசோன் படலம் கிழிந்து தொங்குகிறது. ஊடகங்களும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறிவிட்டன. இது பற்றி எந்தக் கவலையும்படாமல் உலகத் தலைவர்களே, நீங்கள் பணம் சம்பாதிப்பது பற்றி மட்டும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

என் எதிர்காலக் கனவுகளை, குழந்தைத் தன்மையை உங்கள் வெற்று வார்த்தைகளால் திருடிவிட்டீர்கள். நாங்கள் சாகத் தொடங்கியுள்ளோம். உங்களை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம்" என்று ஆவேசமாக ஐ.நா.சபையில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் 16 வயதான கிரெட்டா ஆற்றிய உரைதான் அவர் உலகம் முழுவதும் கொண்டாடப்படக் காரணம்.

அதுமட்டுமில்லாது, வெள்ளிக்கிழமைதோறும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மூலம் உலக நாடுகளின் தலைவர்களுக்குக் கொண்டு செல்கிறார் கிரெட்டா.

SCROLL FOR NEXT