பாகிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான வான்வழித் தாக்குதலை அமெரிக்கப் படைகள் மேற்கொண்டன. இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் வடக்கில் உள்ள வஜிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் உள்ள தர்கா மண்டியில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கப் படைகள் இன்று காலை அங்கு மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தர்கா மண்டியில் உள்ள சுவர்கள் மீது 6 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்த பழங்குடியினப் பகுதியில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
இங்கு அல் கொய்தா தீவிரவாதிகளும் பதுங்கு குழிகள் அமைத்து வசித்து வருகின்றனர். முன்னதாக இதே பகுதியில், ஹக்கானி குழுவினர் மற்றும் சில தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் என 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டனர்.