ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் மொத்தம் 18 மாநிலங்களில் 13 மாநிலங்கள் வெள்ளக்காடாகின. இதனால் அங்கு ஏற்கெனவே அகதிகளாக வாழ்ந்து வந்த மக்கள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சூடான் அகதிகள் ஆணையத்தின் மூத்த தலைவர் இப்ரஹிம் முகமது கூறுகையில், சூடான், தெற்கு சூடான் நாடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சூடான், மற்றும் தெற்கு சூடானில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சூடானில் உள்ள 18 மாநிலங்களில் 13 மாநிலங்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளாக உள்ளன.
இங்கு அகதிகள் உட்பட 2 லட்சத்து 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்டை நாடான தெற்கு சூடானில் 4 லட்சத்து 26 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே வாழ்விடத்தை இழந்து அகதிகளாக வாழும் மக்கள் இன்னும் மோசமான மனிதாபிமான நெருக்கடியில் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. பலர் வீடுகள் இல்லாமல் தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு புதிய தங்குமிடத்தை ஏற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.
ஆண்டுதோறு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் சூடான் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 140 பேர் இந்த காலகட்டத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தனர்.
இந்த ஆண்டு இதுவரை மழை, வெள்ளத்தால் 80 பேர் உயிரிழந்துள்ளனர். 35,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
சூடானின் அல் ஜப்பாலின் மாவட்டம் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் தாங்கள் கடந்த 40 ஆண்டுகளில் இப்படியான மழை வெள்ளத்தைப் பார்த்ததில்லை எனக் கூறுகின்றனர். இதற்கிடையில் முகாம்களில் மலேரியா தொற்று பரவி வருகிறது. 150 அகதிகளுக்கு மலேரியா உறுதி செய்யப்பட்டுள்ளது.