சீனாவின் அண்டைநாடான லாவோஸில் கரோனாவைப் போன்ற வைரஸைக் கொண்ட வவ்வால்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது? இயற்கையாகவே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியதா இல்லை பரவலாகப் பேசப்படுவது போல் சீன ஆய்வகத்திலிருந்து பரவியதா என்ற வாதவிவாதங்கள் இன்னும் முற்றுப்பெறவில்லை. கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு நாடுகளும் கரோனா பிறப்பிடம் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் பாஸ்டர் இன்ஸ்டிட்யூட்டும் லாவோஸ் நாட்டின் தேசியப் பல்கலைக்கழகமும் இணைந்து கரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டது.
அந்த ஆராய்ச்சியில், SARS-CoV-2 வைரஸின் மரபணுக்கு நிகரான நெருக்கமான வைரஸ் இயற்கையாகவே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் வடக்கு லாவோஸ் பகுதியில் சுண்ணாம்புக் குகைகளில் வாழும் ஒருவகை வவ்வால்களில் இந்த வைரஸ் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த வகை வவ்வால்களில் உள்ள வைரஸ், தற்போது மனிதர்களைத் தாக்கிவரும் கரோனா வைரஸ் எந்த முறையில் மனித உடலில் தன்னை நிலைநிறுத்துகிறதோ அதேபோன்றதொரு தன்மையைக் வாவோஸ் வவ்வால்களில் உள்ள வைரஸும் கொண்டுள்ளது என ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் மார்க் எலியட் தெரிவித்துள்ளார்.