பாக்திரியா தங்க புதையல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கிரீடம். 
உலகம்

2,000 ஆண்டுகள் பழமையான தங்க புதையலை தேடும் தலிபான்கள்

செய்திப்பிரிவு

சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான தங்க புதையல் தொகுப்பை தலிபான்கள் தேடி வருகின்றனர்.

கி.மு. 256-ம் ஆண்டு முதல் கி.மு. 100-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசியா மற்றும் இந்திய துணை கண்டத்தை கிரேக்க-பாக்திரியா பேரரசு ஆட்சி செய்தது. இதன் பிறகு கி.பி. 30 முதல் கி.பி. 375-ம்ஆண்டு வரை மத்திய ஆசியா மற்றும் இந்தியாவின் பெரும் பகுதியை குசான பேரரசு ஆட்சி செய்தது. குசான பேரரசில் தலைசிறந்த அரசராக கனிஷ்கர் விளங்கினார். அந்த ஆட்சி காலத்தில் பவுத்த, இந்து மதங்கள் பின்பற்றப்பட்டன.

கடந்த 1978-ம் ஆண்டில் கிரேக்க, ரஷ்ய வம்சாவளியை சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் விக்டர் சரியானிடி தலைமையில் ஆப்கானிஸ்தானின் டில்யாமலைப் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது 6 கல்லறைகளில் இருந்து 20,000-க்கும்மேற்பட்ட தங்க நகைகள், தங்கத்திலான பொருட்கள், தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கிரேக்க- பாத்திரியா மற்றும் குசான பேரரசுகளின் ஆட்சி காலத்தை சேர்ந்தவை என்பது தெரியவந்தது. இந்த தங்க புதையல் தொகுப்பு, ‘பாக்திரியா தங்கம்' என்றழைக்கப்படுகிறது. இது பல ஆயிரம் கோடி மதிப்புடையாகும்.

அமெரிக்க படைகளின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடைபெற்றபோது, ‘பாக்திரியா தங்கம்’ காபூலில்உள்ள தேசிய அருங்காட்சி யகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் கடந்த ஆகஸ்ட் 15-ம்தேதி அந்த நாடு முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு பதவியேற்றுள்ள நிலையில் அந்த நாட்டின் கலாச்சார ஆணைய துணைத் தலைவர் அகமதுல்லா வாசிக் நிருபர்களிடம் கூறும்போது, "பாக்திரியா தங்கம் எங்கிருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்த தங்க புதையல் வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தால் தேசவிரோத குற்றமாக கருதப்படும். இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT