பெண்களின் கல்வி குறித்து அளித்த வாக்குறுதியை தலிபான்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி கூறுகையில், ”ஆப்கானிஸ்தானின் புதிய தாலிபான் ஆட்சியாளர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அங்கீகாரத்தையும், உதவியையும் பெற விரும்பினால் அவர்கள் மிகவும் உணர்வுமிக்கவர்களாகவும், சர்வதேச கருத்து மற்றும் நெறிமுறைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும். தலிபான்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.
முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று தலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில், திங்கள்கிழமை (அதாவது நேற்று) முதல் ஆண் ஆசிரியர்களும், ஆண் குழந்தைகளும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று தெரிவித்தது.அப்போது பெண் ஆசிரியைகள் பற்றியும், பெண் குழந்தைகள் பற்றியும் ஏதும் தெரிவிக்காததால் உலக நாடுகள் தலிபான்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் பாகிஸ்தான் தரப்பில் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளனர்.அவர்கள் பதவி ஏற்றது முதலே பெண்களுக்கு எதிராக அடக்குமுறைகள் அந்நாட்டில் அதிகரித்து வருகின்றன.