உலகம்

ஓரங்கட்டப்படுகிறாரா மிதவாதி முல்லா பரதார்? தலிபான்கள் பூசலை கூர்ந்து கவனிக்கும் மேற்கத்திய நாடுகள்

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான் துணைப் பிரதமர் முல்லா கனி பரதார் ஹக்கானிகளால் ஓரங்கட்டப்படுவதால் தலிபான்களுக்குள் பிளவு ஏற்பட்டு ஆப்கானிஸ்தானை இன்னும் மோசமான சூழலுக்கு இழுத்துச் செல்லலாம் என மேற்கத்திய நாடுகள் அஞ்சுகின்றன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்துவிட்டாலும் கூட ஹக்கானி பிரிவினருக்கும் மிதவாத கொள்கை கொண்டவர்களுக்கும் இடையே பூசல் வலுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலிபான்களின் மிக முக்கியத் தலைவர்களுள் ஒருவரான முல்லா கனி பரதார் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகின. அமைச்சரவையை இறுதி செய்வதில் ஹக்கானி பிரிவினருக்கும் தலிபான்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்பட்டது. மேலும் தலிபான்களுக்குள் பூசல் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், முல்லா பரதார் தான் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அந்தப் பிரச்சினைக்குப் பின்னர் தலிபான்கள் அமைச்சரவையை அறிவித்தனர். அது மேற்கத்திய நாடுகள் வலியுறுத்துவது போல் பெண்கள், சிறுபான்மையினர் என அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியாக இல்லை. மாறாக முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே, அதுவும் அடிப்படைவாதக் கொள்கைகள் உள்ளவர்கள் மட்டுமே இடம்பெற்ற ஆட்சியாக அமைந்தது.

முல்லா கனி பரதார், கத்தார் நாட்டில் நடைபெற்ற தலிபான்கள் அமைதிப் பேச்சுவார்த்தையை பல ஆண்டுகளாக ஒருங்கிணைத்து வந்தவர். மேற்கத்திய நாடுகள் வலியுறுத்துவதுபோல் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை விரும்புபவர். அவர் தான் ஆப்கானிஸ்தானின் இடைக்காலப் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முல்லா முகமது ஹசன் அகுந்த் பிரதமராக்கப்பட்டார். முல்லா கனி பரதார் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்

பரதார் தாக்கப்பட்டது உண்மையே:

இந்நிலையில் தலிபான்கள் அமைச்சரவையை இறுதி செய்வது தொடர்பாக காபூல் மாளிகையில் நடந்த சம்பவங்களை தலிபான்களுக்கு நெருங்கிய வட்டாரம் விவரமாக வெளியிட்டுள்ளது. தலிபான்கள் மொழிவாரியான சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை அமைக்க வேண்டும். அப்போது தான் உலக நாடுகளுடன் இணக்கமான போக்கை உருவாக்க முடியும் என்று முல்லா பரதார் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அப்போது கலீல் உல் ரஹ்மான் ஹக்கானி ஆத்திரமாக எழுந்து வந்து முல்லா பரதாரை நாற்கலியுடன் வைத்துத் தாக்கினார். இதனையடுத்து முல்லா பரதார் ஆதரவாளர்களுக்கும் ஹக்கானி ஆதரவாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. முல்லா பரதாருக்கு காயம் ஏதும் ஏற்படாவிட்டாலும் இந்தச் சம்பவத்தோடு அவர் காபூலில் இருந்து புறப்பட்டுவிட்டார். காந்தஹார் சென்ற அவர் தலிபான்களின் முதன்மைத் தலைவராகக் கருதப்படும் ஹைபதுல்லா அகுன்சதாவிடம் ஆலோசனை நடத்தினார். ஹைபதுல்லா தலிபான்களின் மத குரு.

இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து செப்டம்பர் 7 ஆம் தேதி, தலிபான் அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. அதில் 90% பேர் பூர்வக்குடிகளான பஸ்தூன்கள். ஹக்கானி அமைப்பின் தலைவரும் அமெரிக்காவின் எஃப்பிஐ புலனாய்வு அமைப்பால் தேடப்படும் தீவிரவாதியாகவும் இருக்கும் கலீல் உல் ரஹ்மான் ஹக்கானி உள்துறை அமைச்சரானார். முல்லா பரதார் இரண்டு துணைப் பிரதமர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு வரை தலிபான் அமைப்பும் ஹக்கானி அமைப்பும் தனித்தனி அமைப்புகளாக இருந்தன. அதன் பின்னர் இரண்டு அமைப்புகளும் ஒன்றிணைந்தன. ஆனால், இப்போது மீண்டும் பூசல் வலுத்துள்ளது.

ஐஎஸ்ஐ காரணமா?

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலிபான்களுடன் எப்போதுமே இணக்கமான சூழலைக் கடைபிடிக்கும். அந்த வகையில் ஆட்சி அமைப்பதிலும் ஐஎஸ்ஐயின் பங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. முல்லா பரதார் மிதவாத சிந்தனை உடையவர் என்பதாலேயே அவரை பாகிஸ்தான் கைது செய்து 8 ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்னரே, கத்தார் மூலமாக தலிபான்களுடன் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்க வேண்டி முல்லா பரதாரை விடுதலை செய்யவைத்தார். இப்போது தலிபான்களின் இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முல்லா முகமது ஹசன் அகுந்த் அதிகம் பரிச்சியப்படாதவர். ஆனால், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் அவர் நெருக்கமானவர் என்பதாலும் ஹக்கானிகளை அவர் கட்டுப்படுத்தமாட்டார் என்பதாலும் தான் அவர் பிரதமராக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவும் மவுனம் சாதித்து வருகிறது.

முதல் கூட்டத்தைப் புறக்கணித்தாரா பரதார்:

முல்லா பரதார் தாக்கப்பட்டதால் தலிபான்கள் தலைமையில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தை அவர் புறக்கணித்துவிட்டதாகத் தெரிகிறது. கடந்த 12 ஆம் தேதி கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி காபூல் வந்தார். ஆனால், அப்போது பரதார் காபூலில் இல்லை. இது தலிபான்களுக்குள் நிலவும் பூசலை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
முல்லா பரதார் ஒருமுறை அளித்த பேட்டி ஒன்றில், நான் பாதுகாப்பாகவும் நலமுடனும் இருக்கின்றேன். எவ்வித உட்பூசலும் இல்லை என்று தெரிவித்திருந்தார். ஹக்கனிகள் இடம்பெற்றதாலேயே கத்தார் குழு வந்திருந்தபோது தான் காபூலில் இல்லை என்று வெளியானத் தகவலையும் அவர் மறுத்திருந்தார். ஆனால், ஹக்கானி, தலிபான்கள் பூசல், முல்லா பரதார் ஓரங்கட்டப்படுவது மேற்கத்திய நாடுகளின் கவனம் பெற்றுள்ளது. தலிபான் செய்தித் தொடர்பாளர் பிலார் கரீமி கூறும்போது, தலிபான்கள் எப்போதுமே பதவிக்காக சண்டை போட்டுக் கொள்வதில்லை என்று கூறினார்.

SCROLL FOR NEXT