உலகம்

காலநிலை மாற்றம்: உலகத் தலைவர்களுக்கு ஜோ பைடன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

காலநிலை மாற்றத்துக்கு எதிரான சண்டையில் மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் கொள்ள வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்களிடம் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்துப் பொருளாதார நிகழ்ச்சி ஒன்றில் பைடன் பேசும்போது, “காலநிலை மாற்றத்துக்கு எதிரான சண்டயில் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் உலகத் தலைவர்கள் கவனம் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். உலகளாவிய மீத்தேன் உமிழ்வை 2030க்குள் குறைந்தது 30% ஆகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ள ஒப்பந்தத்தில் பிற நாடுகள் சேருவதை வலியுறுத்துகிறோம்.

இம்மாதிரியான நடவடிக்கைகள் உலக வெப்பமயமாக்கலை உடனடியாகக் குறைத்துவிடாது. ஆனால், பொது சுகாதாரம் மற்றும் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும். அடுத்த மாதம் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு தொடங்குவதற்கு முன் இது தொடர்பான முயற்சிகளை உருவாக்குவோம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

பூமியின் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2040 ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸாக அதிகரித்துவிடும். பூமியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டு மனித இனங்களும், பிற உயிரினங்களும் வாழ முடியாத கடினமான சூழல் உருவாகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

''பூமியில் கார்பன் டை ஆக்ஸைட் உமிழ்வு அதிகரிக்கும் பட்சத்தில் பூமியின் நில அமைப்பும், கடலும் கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கும் திறனை இழக்கும். இதனால் கடல், பனிப்பாறைகள், கடல் நீர்மட்ட உயர்வில் ஏற்படும் மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாத நிலை உண்டாகும்" என்று ஐபிசிசி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.

SCROLL FOR NEXT