உலகம்

2 வயது குழந்தைகளுக்கும் கரோனா தடுப்பூசி: உலகிலேயே முதல் நாடாக கியூபா சாதனை

செய்திப்பிரிவு

2 வயது குழந்தைகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தி உலகிற்கு முன்னுதாரண நாடாகியுள்ளது கியூபா. மேலும், கியூபா அந்நாட்டு மக்களுக்கு சொந்தமாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசியையே செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

"கரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசி. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இந்த உலகில் ஒவ்வொருவரும் பாதுகாப்பானவராக மாறும் வரை ஒருவருமே பாதுகாப்பானவர் இல்லை" இது உலக சுகாதார மையம் அன்றாடம் உலக மக்களுக்கு அறிவுறுத்தி வரும் செய்தி.

இந்நிலையில், கியூபாவில் 2 வயது முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

கியூப மருத்துவமனையின் நம்பிக்கைக் காட்சிகள்..

கரோனா வைரஸ் பலவகையாக உருமாறி தற்போது டெல்டா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில், கியூப தலைநகர் ஹவானாவில் உள்ள அரசு மருத்துவமனையின் காட்சிகள் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளன. 2 வயது லூஸியா தனது கையில் ஒரு காமிக் புத்தகத்துடன் வரிசையில் அமர்ந்திருக்கிறார். அவரைப் போலவே இன்னும் சில குழந்தைகள் அமர்ந்திருக்கின்றனர். பக்கத்தில் உள்ள அறையில் 2 வயதாக டேனியெலிட்டோ அவரது தாயின் மடியில் உட்கார்ந்திருக்கிறார். எதிரே கோமாளி வேடத்தில் ஒரு நபர் குழந்தையின் கவனத்தைத் திருப்ப வேடிக்கைகள் காட்ட செவிலியர் ஒருவர் லாவகமாக கரோனா தடுப்பூசியை செலுத்திவிடுகிறார்.

கியூபாவில் வியாழக்கிழமை தான் 2 வயது முதல் 10 வயதிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. உலகிலேயே கியூபா தான் முதன்முறையாக இவ்வளவு சிறிய வயதிலான குழந்தைகளுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கிறது.

இது குறித்து கியூப நாட்டின் வெடாடோ பாலிகிளினிக் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ஆரோலிஸ் ஒடேனோ கூறுகையில், தடுப்பூசி பாதுகாப்பானது இல்லையென்றால் நாங்கள் எங்களின் குழந்தைகளின் உயிரைப் பணையம் வைப்போமா? என்று கேள்வி எழுப்பினார். டெல்டா வைரஸால் நாட்டில் இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்படத் தொடங்கியிருக்கின்றனர். அதனாலேயே கியூபா குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இது பரீட்சார்த்த முறையில் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 300 குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவமனையிலும், 6 வயது முதல் 10 வயதிலான குழந்தைகளுக்கு பள்ளிகளிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

உலகளவில் அமெரிக்கா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் 12 வயது முதலானவர்களுக்கே கரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. சீனாவின் சைனோவாக், சைனோஃபார்ம் தடுப்பூசிகளை 3 வயதுடைய குழந்தைகளுக்குக் கூட செலுத்தலாம் என அந்நாடு அங்கீகரித்துள்ளது.

SCROLL FOR NEXT