உலகம்

4 குற்றச்சாட்டுகள்; நிரூபணமானால் ஒவ்வொன்றுக்கும் 15 ஆண்டுகள் சிறை: ஆங் சான் சூச்சி எதிர்கொள்ளவிருக்கும் விசாரணை

செய்திப்பிரிவு

மியான்மரில் வீட்டுச் சிறையில் உள்ள தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூச்சி மீதான வழக்குகளில் விசாரணை வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளதாக அந்நாட்டின் ஜுன்டா (மியான்மர் நீதிமன்றம்) தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மீறியது, சட்டவிரோதமாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்தது, தேசவிரோதப் பேச்சு, ஊழல் என 4 குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன.

இவை நிரூபணமானால் ஒவ்வொன்றுக்கும் 15 ஆண்டுகள் வீதம் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 76 வயதான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி, இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாளின் மீதிப் பகுதியை சிறையில் கழிக்க வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

சூச்சியும் சிறைவாசமும்:

கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூச்சி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில்ஆங் சான் சூச்சியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சாங் சூச்சி பொறுப்பேற்றார்.

ராக்கைன் மாநிலத்தில் ராணுவத் தளபதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். சூச்சிக்கு இருந்த ஜனநாயகப் பிம்பமானது இந்த நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக ஆதரித்ததன் மூலம் சிதைந்துபோனது.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையே கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்தநிலையில் கரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தநிலையில் ஆங் சான் சூச்சி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டார்.

1100 பேர் பலி..

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களால் அங்கு இதுவரை 1100 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 8000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

SCROLL FOR NEXT