பிரதிநிதித்துவப்படம் | படம் உதவி ட்விட்டர் 
உலகம்

மகளிர் நலத்துறை அமைச்சகத்தில்கூட பெண் ஊழியர்கள் பணியாற்ற தடை: தலிபான்கள் அறிவிப்பு

ஏஎன்ஐ

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசில் மத்திய மகளிர் நலத்துறை அமைச்சகத்தில் பெண்கள் பணியாற்றத் தடை விதித்தும் ஆண் ஊழியர்கள் மட்டுமே பணிக்குவர வேண்டும் எனவும் தலிபான்கள் உத்தரவி்ட்டுள்ளனர்.

மகளிர் நலத்துறை அமைச்சகத்துக்குள் பெண்கள் நுழையவே தலிபான்கள் விதித்துள்ள தடைக்கு எதிராக அமைச்சகத்துக்கு அருகே பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளதாக ஸ்புட்னிக் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 1995-2001ம் ஆண்டுக்குப்பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான் தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால், அந்த காலகட்டத்தில் பெண்களுக்கு என்ன மாதிரியான உரிமைகள் மறுக்கப்பட்டதோ அதேநிலைதான் இந்த முறையும் நீடிக்கிறது. இதனால் தலிபான்கள் ஆட்சியில் பெண்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

தலிபான்கள் ஆட்சியில் முஸ்லிம்களின் ஷாரியத் சட்டம் கடுமையாக பின்பற்றப்படும் என்பதால், பெண்கள் பெரும்பாலும் வீ்ட்டை விட்டு வெளிேய வரஅனுமதிக்கப்படுவதில்லை. இந்த முறையும் ஷாரியத் சட்டப்படியே ஆட்சி நடக்கும் என தலிபான்கள் தெரிவி்த்துள்ளதால் பெண்கள் நிலை கேள்விக்குறியதாகியுள்ளது.

ஆனால், கடந்தமாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் பேட்டி அளித்த தலிபான்கள் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் “ இஸ்லாமியச் சட்டப்படி பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை தலிபான் ஆட்சியாளர்கள் வழங்குவார்கள். பெண்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றலாம், மற்ற துறைகளிலும் தேவைப்பட்டால் பணியாற்றளாம். பெண்களுக்கு எதிராக பாகுபாடுகாட்டமாட்டோம்”எனத் தெரிவித்தனர்.

ஆனால், அடுத்தடுத்து தலிபான்கள் நடவடிக்கை பெண்கள் உரிமைக்கு மாறாகவே அமைந்துள்ளது. ஊடகத்துறையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, ஆண்களுடன் சேர்ந்து கல்வி கற்கவும், ஒரே வகுப்பறையில் அமரவும் தடைவிதிக்கப்பட்டது. மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர்கள் பாடம் நடத்தவும் தடை விதித்த தலிபான்கள், பெண்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றவும் தடை விதித்துள்ளனர்.

SCROLL FOR NEXT