உலகம்

ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 71% பேருக்கு 2 தவணை தடுப்பூசி போட்டு சீனா சாதனை

செய்திப்பிரிவு

தனது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 71% பேருக்கு 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி சாதனை செய்துள்ளது சீனா.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதல் கரோனா தொற்று பதிவானது. அதன் பின்னர் இப்போது உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 20 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கரோனாவுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. உலக நாடுகள் குறைந்தபட்சம் தங்கள் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்காவது கரோனா தடுப்பூசியை செலுத்த உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

மேலும், தடுப்பூசி விநியோகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை நீக்கி ஏழை, வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தடுப்பூசியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மூன்றாவது பூஸ்டர் டோஸை விட்டுக்கொடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், சீனா தனது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 71% பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

செப்டம்பர் 15 ஆம் தேதி நிலவரப்படி 2.16 பில்லியன் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மி ஃபெங் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 80% பேருக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது.

SCROLL FOR NEXT