எங்களை வாடகைத் துப்பாக்கி போல் அமெரிக்கா பயன்படுத்தியது என ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
சிஎன்என் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது:
அமெரிக்கா எங்களை வாடகைத் துப்பாக்கி போல் பயன்படுத்த முயன்றது. ஆப்கானிஸ்தான் போரில் அவர்கள் (அமெரிக்கா) வெற்றி பெற நாங்கள் உதவி செய்ய வேண்டும் என நினைத்தனர். ஆனால் எங்களால் அது முடியவில்லை.
அதற்காக, நாங்கள் தலிபான்களுக்கு பாதுகாப்பான புகலிடம் கொடுத்ததாகக் கூறுகிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லை பாகிஸ்தான் ஒட்டியுள்ளது. அந்தப் பகுதியை அமெரிக்கா தீவிர கண்காணிப்புப் பகுதியாகப் பயன்படுத்தி வந்தது. அப்படியிருக்க நாங்கள் எப்படி தலிபான்களுக்கு புகலிடம் கொடுத்திருக்க முடியும்.
20 ஆண்டு காலமாக பயங்கரவாதத்துக்கு எதிரானப் போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய போர் எங்களுக்கு பேரிடரை ஏற்படுத்தியது. நாங்கள் வாடகைத் துப்பாக்கி போல் இருந்தோம்.
இப்போதைய சூழலில் ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள இஸ்லாமிக் எமிரேட்ஸ் இடைக்கால ஆட்சியை அங்கீகரிப்பதில் உலக நாடுகள் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ தலிபான்களுடன் இணக்கமாக செயல்படுவதே சரியான தீர்வாக இருக்க முடியும். தலிபான்களுக்கு பெண்கள் உரிமை குறித்து அறிவுரை வழங்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.