அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 4 அமெரிக்கர்களை முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.32 மணிக்கு ஃபால்கான் ராக்கெட் 4சுற்றுலாப்பயணிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அனுப்பும் எலான் மஸ்க்கின் திட்டம் முதல்கட்டமாக வெற்றிகரமாக முடிந்துள்ளது.
அமெரிக்காவின் ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கோடீஸ்வரர் ஜாரிட் ஐசக் மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளனர். இன்ஸ்பிரேஷன் - 4 என்று விண்கலத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
ப்ளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளித் தளத்திலிருந்து இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 5.32 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் என்.9 என்ற ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
ராக்கெட் விண்ணில் பாய்ந்த 12 நிமிடங்களில் அதன் 2-வது அடுக்கு தனியாகப் பிரிந்து, வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்தது.
பூமியிலிருந்து 575கி.மீ உயரத்தில் இந்த விண்கலம் அடுத்த 3 நாட்களுக்குச் சுற்றி வரும். மணிக்கு 27,300 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த விண்கலம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவரும்
3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பிறகு அட்லாண்டிக் கடலில் பால்கான் ராக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை அரசின் மூலம் பயிற்சிபெற்று அதிகாரபூர்வ பயணத்தை மட்டுமே விண்வெளி வீரர்கள் மேற்கொண்டு வந்தனர். முதல் முறையாக, இந்த 4 பேரும் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட முதல் பொதுமக்கள் என்ற சிறப்பை பெறுவார்கள்.
இந்த விண்வெளிச் சுற்றுலாவில் ஷிப்ட்4 பேமெண்ட் நிறுவனத்தின் நிறுவனர் கோடீஸ்வரர் ஜார்ட் ஐசக்மேன், செயின்ட் ஜூட் மருத்துமனையின் 29வயதான மருத்துவர் ஹேலே ஆர்சனாக்ஸ். எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டு இடதுசெயற்கைக்கால் ஆர்சனாக்ஸுக்கு பொருத்தப்பட்டுள்ளது. செயற்கைக்காலுடன் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணும் ஆர்சனாக்ஸ்தான்.
இந்தப் பயணத்துக்காக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் கிறிஸ் செம்ப்ரோஸ்கி, சியான் ப்ராக்டர் ஆகியோர் சென்றுள்ளனர். இதில் கிறிஸ் செம்ப்ரோஸ்கி அமெரிக்க விமானப்படைமுன்னாள் வீரர் தற்போது டேட்டா பொறியாளராக பணியாற்றி வருகிறார். 51வயதான சியான் பிராக்டர் ஒரு புவிஅறிவியல் வல்லுநர், கடந்த 2009ம் ஆண்டே நாசாவுக்கு பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர் தற்போது கல்லூரி பேராசிரியராக உள்ளார்.
இந்த விண்வெளிச் சுற்றுலாவுக்காக இவர்கள் 4 பேரும் 9 மாதங்கள் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். புவிஈர்ப்பு சக்தியில்லாத இடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறுபயணிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் இவர்கள் 4 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் முழுவதும் தானியங்கி என்பதால், இந்த 4 பேரைத் தவிர விண்கலத்தில் எந்த விண்வெளி வீரர்களும் உடன் செல்லவில்லை.
இந்த விண்வெளிச்சுற்றுலா மூலம் திரட்டப்படும் 20 கோடி டாலர்கள் குழந்தைகளுக்கான புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பயணத்துக்கு தலைமை ஏற்றுள்ள கோடீஸ்வரர் ஐசக்மேன் தனியாக 10 கோடி டாலர்களை டென்னஸி நகரில் உள்ள செயின்ட் ஜூட் குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இந்த விண்வெளிப் பயணம் குறித்த சிறப்புத் தொகுப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆவணப்படமாக வெளியிடுகிறது.