சிட்னியில் கரோனா கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் கரோனா குறையத் தொடங்கியுள்ளது. மேலும், கரோனா பரவல் மையங்களாக இருந்த சிட்னி போன்ற நகரங்களிலும் கரோனா குறைந்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தும் விகிதமும் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முடிவுகளுக்கு அதிகாரிகள் வந்துள்ளனர். அதன்படி இரவு நேர ஊரடங்கு திரும்பப் பெறப்பட உள்ளது. எனினும் கரோனா தடுப்பூசி செலுத்தும் விகிதம் 70% தொடும் வரையில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி போன்ற நகரங்களில், பள்ளிகள், அலுவலகங்கள் ஆகியவை ஜூன் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 20 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.