மூன்றாவது டோஸுக்கு அவசியம் இல்லை என லேன்சட் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் உருமாறி தற்போது அதன் டெல்டா வேரியன்ட் உலக நாடுகள் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், கனடா, இஸ்ரேல் எனப் பல்வேறு நாடுகளும் மூன்றாவது டோஸ் தடுப்பூசிப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனால், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.
இந்நிலையில், "ஏழை, வளரும் நாடுகளின் சுகாதாரப் பணியாளர்களும், மூத்த குடிமக்களும் மற்ற நாட்டவரைப் போலவே தடுப்பூசியை சமவாய்ப்புடன் பெறத் தகுதியானவர்களே. ஏற்கெனவே நான் கடந்த மாதம் வளர்ந்த நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதை சற்றே நிறுத்தி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். தற்போது மீண்டும் அதையே வலியுறுத்துகிறேன்.
இந்த ஆண்டு இறுதி வரையிலாவது வளர்ந்த நாடுகள் மூன்றாம் டோஸ் தடுப்பூசியை நிறுத்திவைக்கலாம். இதன்மூலம், உலகளவில் அனைத்து நாடுகளுமே குறைந்தபட்சம் தங்கள் மக்களில் 40% பேருக்காவது தடுப்பூசி செலுத்த முடியும்" என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனாம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனாலும், வளர்ந்த நாடுகள் செவிசாய்க்கவில்லை. குறிப்பாக இஸ்ரேல், மூன்றாவது டோஸின் அவசியம் எனப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், லேன்சட் மருத்துவ இதழ், "பொதுமக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு இப்போதைக்கு அவசரம், அவசியம் இல்லை. இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசிகளே தேவையான அளவு பாதுகாப்பை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளது. மேலும் டெல்டா உள்ளிட்ட அனைத்து வ்கையான வேற்றுருவாக்கங்களுக்கும் எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி திறம்பட செயல்படுகின்றன. ஒருவேளை பிரேக்த்ரூ இன்ஃபெக்ஷன் என்றளவில் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு பாதிப்பு வந்தாலும் கூட தீவிர பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் அந்த மருத்துவ ஆய்வுக் கட்டுரையின் எழுத்தாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் 5.66 பில்லியன் மக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இதில் 80%க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வளர்ந்த நாடுகளே பயன்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.