உலகம்

பாகிஸ்தானில் 15 வயது முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி தயார்: மக்களுக்கு அரசு வேண்டுகோள்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் 15 வயது முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி தயாராக இருப்பதாகவும் மக்கள் இதைப் பயன்படுத்தி தங்களின் குழந்தைகளை கரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுமாறும் அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு அரசு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இப்போது 15 வயது முதல் 18 வயதிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாராக இருக்கிறது. நீங்கள் 15 முதல் 18 வயதுடையவர்கள் என்றால் ஃபைஸர் பயோ என் டெக் தடுப்பூசிக்காக 1166 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி பதிவு செய்துகொள்ளுங்கள். குழந்தைகள் பதிவு விண்ணப்பம் பயன்படுத்தி Child Registration Form (B- Form) விண்ணப்பிக்கவும்" என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,988 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்துக்குப் பின்னர் பாகிஸ்தானில் 3000க்கும் குறைவாக கரோனா தொற்று பதிவாகியிருப்பது இதுவே முதன்முறை.

பாகிஸ்தானில் இதுவரை மொத்தம் 1,207,508 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 26,787 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கரோனா பாசிடிவிட்டி விகிதம் அதாவது நூறில் எத்தனை பேருக்கு தொற்று ஏற்படுகிறது என்ற விகிதம் 5.62% என்றளவில் உள்ளது.

பாகிஸ்தானில் தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தில் தான் கரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1208 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக சிந்த் மாகாணத்தில் 905 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT