ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு பாகிஸ்தானில் இருந்து விமானம் ஒன்று வந்துள்ளது. அங்கு தலிபான்களின் ஆட்சி அமைந்த பின்னர் வந்துள்ள முதல் விமானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தலிபான்கள் வசம் வந்தது. அங்கு தற்போது இடைக்கால அரசு அமைந்துள்ளது. முல்லா முகமது ஹசன் அகுந்த் அந்நாட்டின் இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.
காபூல் விமான நிலையத்தை சீரமைக்கும் பணிகளைக் கத்தார் அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் சர்ச்சைக்குப் பின்னர் அந்நாட்டுடன் முதல் வர்த்தக ரீதியான போக்குவரத்தைத் தொடங்கியுள்ளது பாகிஸ்தான்.
இன்று காபூலில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்துக்கு பாகிஸ்தானில் இருந்து ஜெட் ரக விமானம் வந்திறங்கியது. அந்த விமானத்தில் 10 பேர் மட்டுமே இருந்தனர். அதிலும் பெரும்பாலானோர் விமான சிப்பந்திகள்.
ஏற்கெனவே கடந்த வாரம் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் இது குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது. பாகிஸ்தானின் பிஐஏ எனப்படும் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா கான் வெளியிட்டிருந்த அறிக்கையில், "பாகிஸ்தானில் இருந்து காபூலுக்கு வர்த்தக ரீதியிலான விமானங்களை இயக்கவுள்ளோம். விரைவில் வழக்கமான விமானப் போக்குவரத்தும் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த முறை முதலில் சில சார்ட்டர் விமானங்களை இயக்கவுள்ளோம். இந்த விமானங்கள் சில வாடிக்கையாளர்கள் தங்களின் உறவுகள் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட வேண்டியதன் பேரில் இயக்கப்படவுள்ளது" எனத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று பாகிஸ்தான் விமானம் காபூல் வந்தடைந்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 6000 அமெரிக்கர்கள் உட்பட 1,24,000 பேரை பத்திரமாக வெளியேற்றியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாய்ட் ஜெ. ஜஸ்டின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.