உலகம்

ஆப்கன் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் தலிபான்களால் சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலேவின் சகோதரர் தலிபான்களால் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறுவதாக அறிவித்து வெளியேற ஆரம்பித்தவுடனேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். படிப்படியாக ஒவ்வொரு மாகாணமாகக் கைப்பற்றிய தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தலைநகர் காபூலை தங்கள் வசம் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.

இந்த நிலையில் பஞ்ச்ஷீர் மலைப் பகுதியிலிருந்து தலிபான் எதிர்ப்பு தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் அகமது மசூதுவும், ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலேவும் தலிபான்களுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டோம் என்றும், போரை எதிர்கொள்ளத் தயார் என்றும் அறிவித்தனர். இதில் நடந்த சண்டையில் தலிபான்கள் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள் கடுமையான சட்டங்களை விதித்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கன் துணை அதிபர் அம்ருல்லா சாலேவின் சகோதரர் ஷுரேஷ் சாலே வியாழக்கிழமை தனது மாமாவுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது தலிபான்களால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் செய்தியை உள்ளூர் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எனினும் இந்தச் சம்பவம் குறித்து தலிபான்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

SCROLL FOR NEXT