கரோனா முழுவதுமாக கட்டுக்குள் வரும்வரை கருத்தரிக்க வேண்டாம் என்று பெண்களுக்கு இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிலவுகிறது. இந்த நிலையில் புதிய ஆலோசனையை இலங்கை சுகாதாரத் துறை அமைச்சகம் அந்நாட்டு பெண்களுக்கு வழங்கியுள்ளது.
இதுகுறித்து இலங்கை சுகாதாரத் துறை தரப்பில்,”வருடத்துக்கு 90 முதல் 100 வரை குழந்தை பிறப்பினால் இறப்புகள் ஏற்படும். ஆனால் கரோனாவினால் மட்டும் இந்த வருடம் 40 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே பெண்களுக்கு ஒன்றை வேண்டி கேட்டுக் கொள்கிறோம். கரோனா அச்சத்தை கருத்தில் கொண்டு குறைந்தது ஒருவருடமாவது கருத்தரிப்பை தள்ளி வையுங்கள். ஏற்கெனவே கருவுற்ற பெண்கள், தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள்” என்று வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் 4,74,780 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10, 689 பேர் பலியாகி உள்ளனர்.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.