வடகொரிய தேசிய தின விழாவில் அதிபர் கிம் உற்சாகமாகக் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை குறித்து கடந்த சில மாதங்களாகவே பல்வேறு தகவல்களும் வெளியாகின. ஏன் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூட வதந்திகள் பரவின. ஆனால், உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது உண்மையே மீண்டு வந்துவிட்டார் என்று தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது வடகொரியா.
இந்நிலையில், வடகொரியா நாடு தோற்றுவிக்கப்பட்ட 73வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. நேற்று நள்ளிரவு பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு வருகை தந்த அதிபர் கிம் ஜோங் உன்னை இரண்டு பள்ளிக்குழந்தைகள் அழைத்து வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படம் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.
குறிப்பிட்ட இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமெரிக்க பத்திரிகையாளர் மார்டின் வில்லியம்ஸ், நேற்றைய புகைப்படங்களைப் பார்க்கும் போது அதிபர் கிம் ஜோங் உன்னின் ஆரோக்கியமான தோற்றம் ஆச்சர்யமளிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அவர் இருந்த நிலையை ஒப்பிடும் போது கிம் இதில் பன்மடங்கு சிறப்பாக இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.
மார்டின் வில்லியம்ஸ் பல ஆண்டு காலமாக வடகொரியாவின் அரசியல் விவகாரம், தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவருடைய இந்த ட்வீட் முக்கியத்துவம் பெறுகிறது.
சர்ச்சைகளின் நாயகர்:
வட கொரிய அதிபரின் உடல்நிலை குறித்த சந்தேகங்களை இந்தப் புகைப்படம் தீர்ப்பதாக இருந்தாலும் கூட வடகொரியாவில் இதுவரை ஒரே ஒருவருக்குக் கூட கரோனா பாதிக்கவில்லை என்று அவர் கூறி வருவது உலக சுகாதார மையமே சந்தேகக் கேள்வியை எழுப்பியுள்ளது. ஆனால், அதிபர் கிம்மோ ஐ.நா வழங்கும் தடுப்பூசிகளைக் கூட ஏற்க தயக்கம் காட்டி வருகிறார். வடகொரியா தனது சொந்த பாணியில் கரோனாவை எதிர்கொள்ளும் என்று கூறிவருகிறார். கடுமையான தனிமைப்படுத்துதலை வடகொரிய நாடு பின்பற்றி வருகிறது. எல்லைகள் அனைத்து மூடப்பட்டுள்ளன. இதனால், உணவுப் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தனிமைப்படுத்துதலில் தளர்வுகள் ஏதும் வர வாய்ப்பில்லை என்று கிம் கெடுபிடி காட்டிவருகிறார்.