உலகம்

அமெரிக்காவில் ஐடா புயல் : பலி எண்ணிக்கை 80-ஐ கடந்தது

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் ஐடா புயல் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.

ஜடா புயல் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடந்த வாரம் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது நியூஅர்லியன்ஸ், நியூயார்க், நியூஜெர்சி, பிலடெல்ஃபியா, கனெக்டிகட் ஆகிய பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

நியூயார்க், நியூ ஜெர்சியில், பென்சில்வேனியாவில், லூதியானா ஆகிய பகுதிகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகியது.இதில் லூசியானா, மிசிஸிப்பி மாகாணங்கள் இருளில் மூழ்கின. இன்னமும் இப்பகுதிகளில் மின்சாரம் திரும்பவில்லை.

இந்த நிலையில் ஐடா புயல் காரணமாக அமெரிக்காவில் இதுவரை 82 பேர் பலியாகி உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில், லூசியானா மாகாணத்தில் 26 பேரும், வடகிழக்குப் பகுதியில் 52 பேரும், மற்ற பகுதிகளில் 4 பேரும் ஐடாவுக்கு பலியாகினர்.

ஐடா புயல் காரணமாக பெரும் பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, புயல், காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT