கரோனா பரவலுக்குக் காரணமாக இருந்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது வியட்நாம் அரசு.
உலகம் முழுவதும் கரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலை என வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது.
கரோனா பரவலைத் தடுக்க, தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் மிக முக்கிய பரிந்துரைகளில் ஒன்று.
இந்நிலையில் வியட்நாம் அரசு கரோனா பாதித்த இளைஞர் ஒருவர் அவருக்கு அளிக்கப்பட்ட 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதலைப் பின்பற்றாமல் வெளியில் சுற்றி மற்றவர்களுக்கும் தொற்று பாதிக்கக் காரணமாக இருந்ததால் அவருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
28 வயதான லே வான் ட்ரி என்ற இளைஞர் கா மவ் மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஜூலை மாதம் கரோனாவின் ஹாட் ஸ்பாட்டாகக் கருதப்பட்ட ஹோ சி மின் நகரிலிருந்து தனது சொந்த ஊரான கா மவுக்கு திரும்பியுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர் கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். ஆனால் அவர் அதைப் பின்பற்றாமல் வெளியில் சுற்றித் திரிந்துள்ளார். இதனால், கா மவ் நகரில் கரோனா வேகமாகப் பரவியது. ஒருவர் உயிரிழந்தார்.
இது உறுதியான நிலையில் லே வான் ட்ரி என்ற அந்த இளைஞர்க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வியட்நாமில் இதுவரை 5,40,000 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 13,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனாவை ஒழிக்க அது பரவும் சங்கிலியை உடைப்பது மிகவும் முக்கியம். அதற்குக், கரோனா தொற்று உறுதியானால் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அவசியம். கரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வயது இருந்தால் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயம். வெளியில் இருந்து திரும்பியதும் கைகளை சுத்தமாகக் கழுவுதல் கட்டாயம். வெளியிடங்களில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது மிக மிக அவசியம்.