தலிபான்கள் அமைப்பின் துணைத் தலைவரான முல்லா அப்துல் கனி பராதர் 
உலகம்

ஆப்கனில் தலிபான்கள் பதவியேற்பு நிகழ்ச்சி: 6 நாடுகளுக்கு அழைப்பு

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் 6 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறுவதாக அறிவித்து வெளியேற ஆரம்பித்தவுடனேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர்.

படிப்படியாக ஒவ்வொரு மாகாணமாகக் கைப்பற்றிய தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தலைநகர் காபூலை தங்கள் வசம் கொண்டுவந்தனர்.

இதனையடுத்து அமெரிக்க மற்றும் மேற்கத்தியப் படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர். ஆகஸ்ட் 31 ஆம் அமெரிக்காவின் கடைசி படையும் அங்கிருந்து வெளியேறியது.

இந்நிலையில் அங்கு முறைப்படி ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நிகழ்ச்சியில் 6 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவை ஐக்கிய அமீரகம், பாகிஸ்தான், சவுதி அரேபியா சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் ஆகும்

இதில் பாகிஸ்தான், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தலிபான்கள் ஆட்சி நடத்திய 90களிலே அவர்களுக்கு ஆதரவு அளித்தன.

தற்போது தலிபான்கள் நட்புப் பட்டியலில் புதிதாக சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் சேர்ந்துள்ளன. கத்தாருக்கும் தலிபான்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆப்கன் தலை நகர் காபூலில் தலிபான்கள் ஆட்சிக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

SCROLL FOR NEXT