உலகம்

தேசிய எழுச்சிக்காக அழைப்பு விடுக்கிறேன்: அகமது மசூத் வெளியிட்ட ஆடியோ

செய்திப்பிரிவு

பஞ்ச்ஷீர் மலைப் பகுதியை தலிபான்கள் வெற்றிக் கொண்டதாக அறிவித்த நிலையில், தலிபான் எதிர்ப்பு தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் அகமது மசூத் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறுவதாக அறிவித்து வெளியேற ஆரம்பித்தவுடனேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். படிப்படியாக ஒவ்வொரு மாகாணமாகக் கைப்பற்றிய தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தலைநகர் காபூலை தங்கள் வசம் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளன.

இந்த நிலையில் பஞ்ச்ஷீர் மலைப் பகுதியிலிருந்து தலிபான் எதிர்ப்பு தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் அகமது மசூதுவும், ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலேவும் தலிபான்களுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். போரை எதிர்கொள்ளத் தயார் என்று அறிவித்தனர். இதில் நடந்த சண்டையில் தலிபான்கள் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், தலிபான் எதிர்ப்பு தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் அகமது மசூத் எங்கு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில் அவர் தரப்பிலிருந்து ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த ஆடியோவில் அகமது மசூத் கூறியிருப்பதாவது, “ நீங்கள் எங்கிருந்தாலும், நாட்டிலிருந்தாலும், வெளியே இருந்தாலும் நாட்டின் கவுரவம், சுதந்திரம் மற்றும் செழிப்புக்காக ஒரு தேசிய எழுச்சியைத் தொடங்க நான் உங்களை அழைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கனின் முக்கிய மலைப் பிரதேசமான பஞ்ச்ஷிர் மாகாணத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் அகமத் மசூத். இவர் மறைந்த ஆப்கன் தலைவர் அகமத் ஷா மசூதின் மகன் ஆவார். 1980களில் ஆப்கனில் நிலவிய சோவியத் எதிர்ப்புப் போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் அகமத் ஷா மசூத். இவர் ஆப்கனின் தேசியத் தலைவராகக் கருதப்படுகிறார்.

SCROLL FOR NEXT