உலகம்

காபூல் விமான நிலையம் திறப்பு; சர்வதேச உதவிகளைப் பெற வழிவகை: கத்தார் தூதர் தகவல்

செய்திப்பிரிவு

காபூல் சர்வதேச விமான நிலையம் சர்வதேச உதவிகளைப் பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளதாக ஆப்கனுக்கான கத்தார் தூதர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து கடைசி அமெரிக்கப் படைகளும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியேறிவிட நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்த அமெரிக்க விமானங்கள், ராணுவத் தளவாடங்களை தலிபான்கள் சேதப்படுத்தினர். விமான நிலையம் இனி இயக்கப்படுமா? மக்கள் போக்குவரத்து அனுமதிக்கப்படுமா? சர்வதேச அமைப்புகளின் உதவிகள் ஆப்கன் மக்களுக்குச் சென்று சேருமா என்றெல்லாம் கேள்வி எழுந்தது. இந்நிலையில், காபூல் விமான நிலையம் சர்வதேச உதவிகளைப் பெறுமளவிற்கு தயாராகிவிட்டதாக கத்தார் தூதர் தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் உள்ள சில தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவின் உதவியுடன் ஓடுதளம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் தூதர் தெரிவித்தார்.
காபூல் விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து கத்தார் மத்தியஸ்தம் செய்து வருகிறது. முன்னதாக, இது தொடர்பாக கத்தார் வெளியுறவு அமைச்சர் அல் தானி, பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். காபூல் விமான நிலையத்தை மீண்டும் இயக்குவது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த சில நாட்களில் நல்ல செய்தியைக் கேட்பீர்கள் என்று அல்தானி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இன்று காபூலில் இருந்து காந்தஹார் மற்றும் மஜார் இ ஷரீஃப் பகுதிகளுக்கு உள்நாட்டு விமானமும் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. உயர் மட்ட ஆலோசனை:

இந்நிலையில் வரும் 13 ஆம் தேதி ஜெனீவாவில் ஐ.நா. தலைவர் அந்தோனியோ குத்ரேஸ் ஆப்கன் விவகாரம் தொடர்பாக உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலக நாடுகள் ஆப்கன் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சர்வதேச சமூகத்தின் ஒற்றுமை இதில் அவசியம். வரும் 13 ஆம் தேதி நான் ஆப்கன் நிலவரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறேன். உலக நாடுகள் ஆப்கனுக்கு நிதி உதவி செய்ய வலியுறுத்தவுள்ளேன். கூடவே தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வலியுறுத்துவேன் என்று பதிவிட்டுள்ளார்.

தலிபான்கள் ஆட்சியமைப்பது பற்றி இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை. விரைவில் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

SCROLL FOR NEXT