90களில் இருந்த பெண்கள் அல்ல நாங்கள் எனப் பதாகைகளைத் தாங்கி, ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக இளம் பெண்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமையவுள்ள நிலையில், சம உரிமை வேண்டும் என்று நாடு முழுவதும் இளம்பெண்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக காபூல், ஹெராத் நகரங்களில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 90களில் இருந்த பெண்கள் அல்ல நாங்கள் என்ற பதாகைகளை ஏந்தியபடி இளம்பெண்கள் பேரணி சென்றனர். இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காபூலில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்று செய்தி வெளியாகியுள்ளது.
போராட்டம் குறித்து காபூலில் செயல்படும் ஆம்னெஸ்டி தன்னார்வலர் சமீரா ஹமிதி கூறும்போது, “தலிபான்கள் அவர்கள் கோர முகத்தைக் காண்பிக்கத் தொடங்கியுள்ளனர். போராட்டம் நடத்திய பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், வங்கிகள், அலுவலகங்கள், ஊடகங்களில் பணிபுரியும் பெண்களை வீட்டிலேயே இருக்குமாறு தலிபான்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆப்கனில் அரசியல், பொருளாதார, சமூகப் பிரிவுகளில் செயலாற்றி வந்த பெண்கள் மறையத் தொடங்கியுள்ளனர். பெண் சமூக ஆர்வலர்களுக்குத் தலிபான்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
பின்னணி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.
ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆப்கனில் தலிபான்கள் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் பெண்கள் அமைச்சர்களாகும் வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.