உலகம்

டெல்டா வைரஸ்; குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை: அமெரிக்க ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

டெல்டா வைரஸ் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் நடத்தியுள்ள ஆய்வின் முடிவில், “அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதம் முதலே டெல்டா வைரஸ் காரணமாக கரோனா பரவல் தீவிரமடைந்தது. டெல்டா வைரஸ் காரணமாகத் தொற்று அதிக எண்ணிக்கையில் பரவியது. எனினும் டெல்டா வைரஸ் காரணமாக தீவிர பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், இதில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களைவிட தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 0-17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறைந்த அளவிலேயே டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டனர். மேலும் குழந்தை நல மருத்துவமனைகளில் நாங்கள் சேகரித்த தரவுகள்படி குழந்தைகள் டெல்டா கரோனா வைரஸ் காரணமாக தீவிர பாதிப்புக்குள்ளாகவில்லை என்பது தெரியவருகிறது.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விரைவில் அதற்கான அனுமதி கிடைப்பின், கரோனா தொற்றிலிருந்து குழந்தைகளை எளிதில் பாதுகாக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT