ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர் அல்லது பிரதமராக தலிபான் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா பொறுப்பேற்பார், அவர் தலைமையில் புதிய அரசு அமையும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஈரான் நாட்டில் இருப்பதுபோன்று ஆப்கானிஸ்தானிலும் அரசு அமைக்க உள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். அதாவது தலிபான்களின் உயர் மட்டத் தலைவர் அதிபராகவோ அல்லது பிரதமராகவோ பொறுப்பேற்று அரசியல் மற்றும் மதரீதியான விவரங்களுக்கும் தலைவராக இருந்து அதிபருக்கும் அப்பார்பட்டு செயல்படுவார். அந்த பதவியை தலிபான் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதாவுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்தபின், லிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றியவுடன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பினார். கடந்த மாதம் 31-ம்தேதியோடு ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்டனர்.
இதனால், ஆப்கனுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தலிபான்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் ஆப்கனில் நிலையற்ற சூழல் நிலவுவதால், தலிபான்களின் கடந்தகால கொடூரமான ஆட்சிக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கனில் அடுத்து என்ன நடக்கும் என உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர் அல்லது பிரதமராக தலிபான் தீவிரவாத அமைப்பின் உயர் தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா பதவி ஏற்பார் என தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்களின் அரசியல் அலுவலகத் தலைவர் ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் டோலோ சேனலுக்கு அளித்த பேட்டியில்” ஆப்கானிஸ்தானில் அடுத்த சில நாட்களில் புதிய அரசு அமைய உள்ளது. புதிய அதிபர் அல்லது பிரதமராக தலிபான் உயர் தலைவர் ஹெய்பத்துல்லா அகுன்ஜதா பதவி ஏற்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
தலிபான் கலாச்சார இயக்கத்தின் உறுப்பினர் அலானுல்லாஹ் சமன்கானி கூறுகையில் “ தலிபான்களின் உயர் தலைவர் முல்லா ஹெய்பத்துல்லா அகுன்ஜதா ஆப்கனின் புதிய தலைவராகப் பொறுப்பேற்பார்.
இஸ்லாத்தை மையமாகக் கொண்ட புதியஅரசு உருவாகி மக்களுக்கு வழிகாட்டியாக இருப்போம். தலிபான்களின் உயர் தலைவரைவிட புதிய அரசுக்கு தலைவராக வேறு யாரும் இருக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே தலிபான்கள் தலைமையில் புதிய அரசு நாளை(3ம்தேதி) அமையக்கூடும் என்று ரஷ்யாவின் ஸ்புட்னிக் இணையதளம் தெரிவித்துள்ளது.
தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் முல்லா பராதர் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.