பிரதிநிதித்துவப்படம் 
உலகம்

ஆப்கனில் தலிபான்களுக்கு வரலாற்று வெற்றி: அல்கொய்தா தீவிரவாதிகள் புகழாரம்

பிடிஐ

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டுவந்து, அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்த தலிபான்களுக்குக் கிடைத்தது வரலாற்று வெற்றி என்று அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர்கள் பாராட்டி, புகழாரம் சூட்டியுள்ளனர்.

நியூயார்க்கில் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குக் காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா உறுதி பூண்டது. அல்கொய்தாவுக்கு அடைக்கலம், ஆதரவு அளித்து வந்த, தலிபான்களை ஆப்கானிஸ்தான் ஆட்சியில் இருந்து கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்கா, நேட்டோ படைகள் அகற்றின.

அதன்பின் அங்கு ஜனநாயக ஆட்சியை நிறுவி, அதிபர் தேர்தலை நடத்தி கடந்த 20 ஆண்டுகளாகத் தலிபான்களுடன் அமெரிக்காவும், மேற்கத்தியப் படைகளும் போர் செய்தன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறப்போவதாக அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து புதிய அதிபராக வந்த ஜோ பைடனும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் ஆப்கன் மண்ணைவிட்டுச் சென்றுவிடும் எனத் தெரிவித்தார். இதன்படி, காபூல் நகரை விட்டு அனைத்து அமெரிக்கப் படைகளும் நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றன.

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவத்தினர் யாரும் இல்லாததைத் தலிபான்கள் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடினர். விமான ஓடுதளத்தில் நடந்தும், நடனமாடியும், துப்பாக்கிகளில் சுட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், தலிபான்களுக்குக் கிடைத்தது வரலாற்று வெற்றி என அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பாராட்டியுள்ளது. அமெரிக்க இணையதளமான 'தி லாங் வார்' ஜர்னலுக்கு அல்கொய்தா அனுப்பிய செய்தியில், “ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவத்தை விரட்டி தலிபான்கள் வரலாற்று வெற்றி பெற்றுள்ளனர்.

காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் புனித குர்ஆனின் வாசகங்களைக் கேட்பதன் மூலம் அவர்களின் இதயம் அமைதி அடையட்டும். நம்பிக்கையற்றவர்களின் தலைமையாக இருந்த அமெரிக்கர்களை அவமானப்படுத்தி, தோற்கடித்த பெருமை, புகழ் எல்லாம் வல்ல இறைவன், சர்வ வல்லமை படைத்த இறைவனையே சேரும். இஸ்லாமிய மண்ணிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்காவின் உலகளாவிய மரியாதையைச் சிதைத்து, நீக்கி, அவமானப்படுத்தி, அமெரிக்காவைத் திருப்பி அனுப்பிய பெருமை இறைவனையே சேரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் கண்காணிப்பு அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் அல்கொய்தா தீவிரவாதிகள் வசித்து வருகின்றனர். ஆப்கனின் பல்வேறு பகுதிகளில் அல்கொய்தா தீவிரவாதிகள், வெளிநாட்டு ஆதரவாளர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர்.

அல்கொய்தா, தலிபான் ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளும் உணர்வு ரீதியாக, உறவு ரீதியாக நெருக்கமானவர்கள். இரு குழுக்களுக்கு இடையே திருமண உறவுகளும் உண்டு. பல்வேறு ஒற்றுமைகளும் உண்டு. அல்கொய்தா மனநிலையோடு ஒத்த நிலையில் இருக்கும் பல்வேறு சிறு தீவிரவாதக் குழுக்கள் தலிபான்கள் வெற்றியைத் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT