உலகம்

ஐஎஸ் அமைப்புக்கு அமெரிக்கா எச்சரிக்கை

செய்திப்பிரிவு

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “ ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளில் நடக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் கவனித்து வருகிறோம். 5,500க்கும் அதிகமான அமெரிக்கர்கள் இதுவரை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ளனர். ஐஎஸ் தீவிரவாதிகளுடான எங்கள் போர் இன்னமும் முடியவில்லை” என்று தெரிவித்தார்.

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கும் பைடன் எச்சரிக்கை விடுத்தார். மேலும், ஆப்கனில் அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்பட்டது சரியான முடிவுதான் என்று அவர் தெரிவித்தார். அதன்படி ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டன.

வெளியேறுவதற்கு முன்னதாக, காபூல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களுக்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ஏவுகணை அழிப்பு அமைப்புகள் என மொத்தம் 73 வாகனங்களை அமெரிக்கப் படைகள் இனி பயன்படுத்தவே முடியாதபடி செயலிழக்கச் செய்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் லட்சக்கணக்கான மக்கள் அச்சத்தால் வெளியேறியுள்ளனர்.

SCROLL FOR NEXT