காபூல் விமான நிலையத்தை நோக்கி ஐந்து ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையும் உறுதிபடுத்தியுள்ளது.
கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசம் வந்தது. அதன் பின்னர் அங்கிருந்து மக்கள் அலை கடலென திரண்டு வெளிநாடுகளில் தஞ்சம் புக விமான நிலையத்தில் குவிந்தனர். இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தை மக்கள் நெருங்க முடியாத அளவுக்கு அப்பகுதி பதற்றமான பகுதியாக மாறியுள்ளது. தலிபான்களின் எதிரியான ஐஎஸ்ஐஎஸ் கோராசன் படைகள் தான் இந்தத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த வியாழக்கிழமை நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 200 பேர் பலியாகினர்.
முன்னதாக காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்திருந்த சில மணி நேரத்துக்குள்ளாக, அந்த விமான நிலையத்தின் மீது அடுத்தடுத்து ராக்கெட் குண்டுகள் செலுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காபூல் விமான நிலையத்தை நோக்கி ஐந்து ராக்கெட் ஏவப்பட்டதாகவும் எனினும் அந்த முயற்சியை அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் முறியடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அவற்றில் ஒன்று குடியிருப்பு பகுதியை தாக்கியது.
இந்த ராக்கெட்டுகளை ஏவியது யார் என்பது தெரியவில்லை. எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. காபூல் விமான நிலையம் மீதான ராக்கெட் தாக்குதலை முறியடித்ததாக அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.