உலகம்

காபூல் விமான நிலையத்திலிருந்து உடனே வெளியேறுங்கள்: அமெரிக்கா எச்சரிக்கை

செய்திப்பிரிவு

காபூல் விமான நிலையத்திலிருந்து உடனே வெளியேறுங்கள் என்று குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே நேற்றுமுன் தினம் (வியாழக்கிமை மாலை) ஐஎஸ்ஐஎஸ் கோராசன் படைகள் நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பொறுப்பேற்றது.

ஐஎஸ்-கோராசன் அமைப்பு ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கோராசன் மாகாணத்தில் இயங்கும் முக்கிய தீவிரவாத அமைப்பாகும்.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் இன்னும் அச்சுறுத்தல் முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, காபூல் விமான நிலையத்தில் மேலும் சில தாக்குதல்களுக்கு வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளார்.

அதனால், அமெரிக்கர்கள் காபூல் விமான நிலையப் பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "அமெரிக்க குடிமக்கள் காபூல் சர்வதேச விமான நிலையத்தின் அபே வாயில், கிழக்கு, வடக்கு வாயில்களில் இருந்து உடனே வெளியேறுங்கள். தொடர்ந்து விமான நிலையத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அமெரிக்கக் குடிமக்கள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக விமான நிலைய வாயில் பகுதிகளைத் தவிர்க்கவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐஎஸ்ஐஎஸ் கோராசன் படைகள் மீது ட்ரோன் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. வியாழ்க்கிழமை தாக்குதலுக்கு இது பதிலடி என்று கூறப்பட்டது.

SCROLL FOR NEXT