போர் சூழ்ந்துள்ள இராக்கில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தங்களது பாஸ்போர்ட்டை நிறுவன உரிமையாளர்களிடமிருந்து திரும்ப பெற முடியாமல் சிக்கி தவிப்பதாக அம்னெஸ்டி இண்டர்னேஷனல் தெரிவித்துள்ளது.
இராக்கில் ஷியா பிரிவு ஆதரவு அரசுக்கு எதிராக சன்னி பிரிவினர் போர் கொடி உயர்த்தியுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எல் என்ற தீவிரவாத அமைப்பு, இராக்கின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இராக்கில் தங்கி பணிபுரிந்து வரும் இந்திய தொழிலாளர்கள் இன்னும் ஆபத்தான சூழலில் சிக்கி உள்ளதாக அம்னெஸ்டி சர்வதேச அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளால் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியில் சிக்கியுள்ள இந்தியர் ஒருவர், "இராக்கில் பதற்றம் தொடங்கியதில் இருந்து நாங்கள் எங்கள் அலுவலக வளாகத்திற்குள்ளேயே முடங்கி போய் உள்ளோம்.
எங்களுடைய பாஸ்போர்ட் இல்லாமல் நாங்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது. ஒவ்வொரு நாளை கடக்கும் போதும் எங்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதை நாங்கள் உணர்கிறோம். எங்கள் நாட்டிற்கு செல்ல விரும்புகிறோம்” என்று தொழிலாளி கூறியதாக அம்னெஸ்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.