உலகம்

காபூல் தாக்குதலுக்கு சவுதி கண்டனம்

செய்திப்பிரிவு

காபூல் விமான நிலையத் தாக்குதலுக்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

காபூல் விமான நிலையம் அருகே நேற்று நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க ராணுவத்தினர் 12 பேர் உள்ளிட்ட 72 பேர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில் காபூல் விமான நிலையத் தாக்குதலுக்கு சவுதி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “காபூல் தாக்குதலுக்கு எங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் குற்றச் செயல்களை நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் ஆப்கன் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். ஆப்கானிஸ்தானில் நிலைமை விரைவில் சீராகும் என்று நம்புகிறோம். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எங்களது ஆதரவு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் இந்தக் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

SCROLL FOR NEXT