உலகம்

ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.3000; உணவு ரூ.7000: காபூல் விமானநிலையத்தில் காத்திருக்கும் மக்களின் துயரம்

செய்திப்பிரிவு

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் விமானநிலையத்தில் காத்திருக்கும் மக்கள் அன்றாடம் உணவுக்கும், குடிதண்ணீருக்கும் இந்திய மதிப்பில் பல ஆயிரம் ரூபாயை செலவழிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், அங்கு இன்னும் முறைப்படி ஆட்சி மாற்றம் நிகழவில்லை. இந்நிலையில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் எனப் பல்வேறு நாடுகளும் ஆப்கனில் உள்ள தங்கள் நாட்டு மக்கள், தங்களுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் நாட்டவர், அந்நாட்டின் பொதுமக்கள் எனப் பலரையும் மீட்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், காபூல்விமான நிலையத்தில் காத்திருக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேர்ந்துள்ளது. அங்கு ஒரு பாட்டில் குடிதண்ணீர் ரூ.3000க்கும், ஒரு தட்டு உணவு ரூ.7000க்கும் விற்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடைக்காரர்கள் ஆப்கன் நாணயத்தின் படி வசூலிக்காமல் பொருட்களுக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் வசூலிப்பதால் இந்த விலையேற்றம் எனக் கூறப்படுகிறது.

காபூல் விமானநிலையம் முழுக்க அமெரிக்க, பிரிட்டன் ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எப்படியாவது காபூலில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று காத்திருக்கும் அப்பாவி மக்களின் அவலநிலை கருதி அவ்வப்போது பொது மக்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கி உதவி வருகின்றனர்.

அமெரிக்கா எச்சரிக்கை:

இதற்கிடையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிரிவினரால் காபூல் விமானநிலையத்திற்கு மிகப்பெரிய தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT