கரோனா பேரிடர் நிவாரண கடன் வழங்குவதில் மோசடி செய்ததாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தமுகுந்த் மோகன் வாஷிங்டன் மாகாணத்தில் கிளைட் ஹில் பகுதியில் வசித்து வருகிறார். இவர்மீது கரோனா பேரிடர் நிவாரண கடன் தொகை பெறுவதில் 18 லட்சம் டாலர் மோசடிசெய்ததாக கடந்த மார்ச் 15-ம் தேதி வழக்கு தொடரப்பட்டது.
மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களில் பணியாற்றியது போன்ற போலியான ஆவணங்களை தயார் செய்து அவர் கடன் பெற்று மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் தான் வேலையிழந்து தவிப்பது போன்று ஆவணங்களைத் தயார் செய்து 55 லட்சம் டாலர் கடனுக்கு விண்ணப்பித்து அதன் மூலம் 18 லட்சம் டாலர் கடன் பெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் வாஷிங்டன் மேற்கு மாகாண நீதிமன்றம் மோகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்ற ஆவணங்களின்படி பார்க்கையில் கரோனா பெருந்தொற்று பேரழிவு கடன் திட்டத்தின் கீழ் 8 விண்ணப்பங்கள் மூலம் 55 லட்சம் டாலர் தொகையை அவர் பெற முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையைப் பெறுவதற்காக போலி ஆவணங்களைத் தயார் செய்துள்ளார். அதில் போலி வரி செலுத்திய ஆவணமும் அடங்கும். இவர் பணியாற்றிய மெகன்ஜோ இன்கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஊழியர்களின் சம்பளப் பட்டியலில் பல லட்சம் டாலர் தொகை வரியாக செலுத்தப்பட்டுள்ளதாக ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.