உலகம்

பயப்படாதீர்கள்; பணிக்குத் திரும்புங்கள்: அதிகாரிகளுக்கு தலிபான்கள் உத்தரவு

செய்திப்பிரிவு

பயப்பட வேண்டாம். உங்கள் பணிகளுக்குத் திரும்புங்கள் என்று அதிகாரிகளுக்கு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு அதிகாரிகள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆப்கனின் நிதி அமைச்சகத்தில் ஆலோசகராக உள்ள அஷ்ரப் ஹதரி கூறும்போது, “தலிபான்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்தனர். பீதியடைய வேண்டாம் அல்லது தலைமறைவாக இருக்க முயலாதீர்கள் என்று கூறினர். வெளிநாட்டினர் வெளியேறிய பிறகு நாட்டை நடத்த அதிகாரிகளுக்கு உங்கள் நிபுணத்துவம் தேவை என்று கூறினர்” எனத் தெரிவித்தார்.

ஆப்கனின் நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையில் பணிபுரியும் சொஹ்ராப் சிக்கந்தர் கூறும்போது, “தலிபான்கள் எங்களைப் பணிக்குத் திரும்ப உத்தரவிட்டுள்ளனர். ஆனால், என்னுடன் பணிபுரிந்த பெண்கள் யாரும் தற்போது பணிக்கு வருவதில்லை” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT