ஆப்கனை தலிபான்கள் கைபற்றிய பிறகு காபூலில் சிக்கிய மக்களை ஏற்றிக் கொண்டு சென்ற உக்ரைன் நாட்டு விமானம் நடுவானில் ஆயுத மேந்திய தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. அந்த விமானம் ஈரான் நோக்கி செல்வதாக தெரிகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் ஆப்கானிஸ் தான் தலைநகர் காபூலையும் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான் ஆட்சிக்கு அஞ்சி, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர்.
இதில், கடந்த திங்கள்கிழமை, காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானத்தில் இறக்கைகளில் ஏறி பயணித்த சிலர் உயிரிழந்தது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆப்கானிஸ் தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், அங்கிருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.
இதுபோலவே பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டு வருகின்றனர். காபூலில் இருந்து பல நாட்டு விமானங்களும் தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகின்றன.
இந்தநிலையில் உக்ரைன் நாட்டு விமானம் விமானம் காபூலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை ஏற்றிக் கொண்டு தாயகம் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று ஏறியதாக கூறப்படுகிறது.
அந்த விமானம் நடுவானில் கடத்தப்பட்டதாக தெரிகிறது. விமானம் தற்போது ஈரான் நாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்தும், இதில் தலிபான்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து உக்ரைன் அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.