ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனியின் சகோதரர் தலிபான்களுக்கு தனது ஆதரவை வழங்கி உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிலிருந்து தப்பிச் சென்றார். ஆப்கனிலிருந்து வெளியேறிய அஷ்ரப் கானி தற்போது தனது குடும்பத்தினருடன் கத்தாரில் உள்ளார்.
இந்த நிலையில் அஷ்ரப் கானியின் சகோதரர், தலிபான்களுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
அஷ்ரப் கனியின் சகோதரரான ஹஷ்மத் கானி அஹ்மத்ஸாய், தலிபான் தலைவர் கலீல் உர் ரஹ்மான் மற்றும் மதத் தலைவர் முஃப்தி மஹ்மூத் ஜாகிர் முன்னிலையில் தலிபானுக்கு தனது ஆதரவை அறிவித்தார் என்று ஆப்கான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக வெளியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
தற்போது ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தலிபான்கள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.