சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவன் கப்பல் மீண்டும் கால்வாய்க்குள் வந்த சென்ற நிமிடங்கள் கால்வாய் ஆணையத்திற்கு திக் திக் நிமிடம் போல் அமைந்தது. ஆனால், கால்வாய் ஆணைய அதிகாரிகள் இம்முறை மிகக் கவனமாக செயல்பட்டு கப்பலை வழியனுப்பிவைத்தனர்.
அந்த 6 நாட்கள்:
தைவான் நாட்டைச் சேர்ந்த ‘எவர் கிரீன் மெரைன்’ என்ற நிறுவனம் இயக்கிவரும் ‘எவர் கிவன்’ என்ற சரக்குக் கப்பல் கடந்த மார்ச் 23 ஆம் தேதி எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயின் குறுக்காக சிக்கிக் கொண்டது. தரைதட்டிய கப்பலை மீட்கும் பணி வெகு நாட்களாக நடைபெற்றது. 6 நாட்களுக்குப் பின்னர் கப்பல் ஒருவழியாக கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான ‘எவர் கிவன்’ கப்பல் 20 ஆயிரம் கண்டெய்னர்களை கொண்டு செல்லத்தக்கது. இந்தக் கப்பல் சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிக் கொண்டதால் பல்லாயிரம் கோடிக் கணக்கான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் எகிப்து நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சூயஸ் கால்வாய் உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையாக விளங்குகிறது. உலக வர்த்தகத்தின் 12 சதவீதம் இந்தக் கால்வாயின் வழியாக நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்தக் கால்வாயின் குறுக்காக ‘எவர் கிவன்’ கப்பல் தரைதட்டிக்கொண்டதால் அந்த வழியாக பிற கப்பல்கள் செல்லமுடியாத நிலை உருவானது. உலக வர்த்தகத்தையே ஸ்தம்பிக்கச் செய்தது. கடினமான போராட்டத்துக்குப் பின்னர் இந்தக் கப்பல் மார்ச் 29ல் மீட்கப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
மீண்டும் வந்த கப்பல்:
இந்நிலையில், இந்தக் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் சூயல் கால்வாய்க்கு வந்தது. இந்த முறை எவர்கிவன் வரும் முன்னரே பல்வேறு நடவடிக்கைகளையும் கால்வாய் ஆணையம் மேற்கொண்டிருந்தது. பிரிட்டனிலிருந்து சீனா நோக்கி வந்த எவர்கிவன் கப்பல் எந்த சிக்கலும் இல்லாமல் சூயஸ் கால்வாயைக் கடந்தது. கப்பல் கால்வாயைக் கடக்கும் வரை அனைவரும் திக் திக் நிமிடங்களில் உறைந்திருந்தனர். ஆனால் எவ்வித சிக்கலும் இன்றி எவர் கிவன் கால்வாயைக் கடந்து சென்றது. எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயைக் கடந்து செல்வது இது 22வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.