உலகம்

காபூல் விமானநிலையம் வரை வந்துவிட்டால் போதும் மீட்டுவிடலாம்:  தயார்நிலையில் இந்திய விமானப்படை 

செய்திப்பிரிவு

ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கத் தயார் நிலையில் இந்திய விமானப்படையின் சி17 விமானம் காத்திருக்கின்றது.

அங்குள்ள இந்தியர்கள் காபூல் விமான நிலையம் வரை வந்தால் மட்டும் போதும் அவர்களை தாயகம் அழைத்துவந்துவிடலாம் என்ற நிலையில் விமானம் தயார் நிலையில் உள்ளது.

இதற்காக இந்தியா, அமெரிக்காவின் உதவியையும் நாடியுள்ளது. காபூல் நகரம் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் விமான நிலையம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுமார் 400 இந்தியர்கள் வரை இன்னும் அங்கு சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் மக்கள் பலரும்கூட இந்தியாவுக்கு விசா கோரி விண்ணபித்து வருகின்றனர். அவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒருமுறை சி17 விமானம் காபூல் சென்ரால் குறைந்தது 250 பேரை மீட்டுக் கொண்டுவர முடியும். இதனால், காபூல் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கும்படி அமெரிக்காவின் உதவியை இந்தியா நாடியுள்ளது.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானிலிருந்து மக்கள் யாரும் வெளியேற வேண்டாம் என வலியுறுத்தி வரும் தலிபான்கள் விமான நிலையம் நோக்கி வருபவர்களை விரட்டியடிப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT