உலகம்

ஆப்கன் மக்களுக்காக எல்லையைத் திறந்து வையுங்கள்: அண்டை நாடுகளுக்கு ஐ.நா வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான் மக்களுக்காக அண்டை நாடுகள் தங்களின் எல்லையைத் திறந்து வைக்குமாறு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் UN High Commissioner for Refugees (UNHCR) கோரியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுக்குள் வந்தபிறகு அங்கிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த திங்கள் ஆப்கன் விமான நிலையத்தில் மக்கள் அலைகடலென திரண்டதும் அங்கிருந்து விமானத்தில் தொற்றியவாறு உயிர்பிழைக்க முயற்சித்து தோற்றதும் உலக நாடுகளை உறையவைத்துள்ளது.

அங்கிருந்து இன்னமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற முற்படுகின்றனர். ஆனால், விமானநிலையம் செல்ல முடியாது தலிபான்கள் மக்களை விரட்டியடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் ஆப்கன் மக்களுக்காக தங்களின் எல்லைகளைத் திறந்துவைக்க வேண்டுமென்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாபியா மன்டூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், "ஆப்கானிஸ்தான் மக்களில் பெரிம்பாலோனார் வழக்கமான பாதைகள் வழியாக நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை. இன்று அங்கு ஆபத்தான சூழலில் இருப்பவர்களுக்கு முறையாக வெளியேற வாய்ப்பில்லாமல் இருக்கிறது. ஆகையால் நாள்தோறும் மாறிக்கொண்டிருக்கும் பதற்றமானன சூழலைக் கருத்தில் கொண்டு அண்டை நாடுகள் ஆப்கன் மக்களுக்காக எல்லைகளைத் திறந்து வைக்க வேண்டும்" என்று கோரியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 9000 பேரை அமெரிக்கா மீட்டுள்ளது. இவர்கள் அனைவரும் காபூல் விமானநிலையம் வாயிலாக வெளியேறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் தங்களின் ஆட்சி 1996ல் இருந்ததுபோல் இருக்காது. இஸ்லாமிய சட்டத்துக்கு இணங்க பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்றெல்லாம் கூறினர் தலிபான்கள். ஆனால், அங்கு நிலைமை மாறவில்லை எனக் கூறுகிறது ஐ.நா.,வின் ஆராய்ச்சிக் குழு. தலிபான்கள் அச்சுறுத்தல் குறித்து ஐ.நா. சார்பாக நார்வேஜியன் சென்டர் ஃபார் குளோபல் அனாலிஸிஸ் இந்த ஆவணத்தை எழுதியுள்ளது.

SCROLL FOR NEXT