ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சியை இலங்கை அரசு அங்கீகரித்தால் தீவிரவாதத்துக்கு உதவுவதற்கு சமம், ஆதலால், அங்கீகரிக்கக் கூடாது என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கனில் நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளிேயறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். காபூல் நகரில் நுழைந்தவுடன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டார்.
இதனால் ஆப்கனில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி நிறுவப்பட உள்ளது. இதில் ஆப்கன் அதிபராக தலிபான்கள் இயக்கத் தலைவர் வருகிறாரா, அல்லது கடந்த 1995-ம் ஆண்டில் இருந்தது போன்று நிர்வாகக் குழு அமைத்து ஆப்கனை நிர்வகிக்கப் போகிறார்களா என்பது தெரியவில்லை. ஆப்கனின் அரசியல் நகர்வுகளை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துவருகின்றன.
இந்நிலையில் இலங்கையின் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி என்பது ஜிகாதி தீவிரவாத குழுக்களின் மையப்புள்ளியாக மாறிவிடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. மக்களுக்கும், மாநிலங்களுக்கும் விடுக்கும் தலிபான்கள் அச்சுறுத்தல்கள் குறித்து இதுவரை யாரும் கண்டிக்கவில்லை. புனித குர்ஆனை தவறாகப் புரிந்து கொண்டு தலிபான்கள் நடப்பதால், முழுமையான இஸ்லாமிய நாடுகளுக்கும் மற்ற தேசங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
தலிபான்கள் அரசை அங்கீகரிக்க எந்தவிதமான நியாயப்படுத்தும் காரணம் இல்லை. ஆப்கானிஸ்தான் அரசுடன் வைத்துள்ள தூதரக உறவுகளை உடனடியாக இலங்கை அரசு துண்டித்து, தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற வேண்டும்.
மத்திய ஆசியாவில் இலங்கைக்கு தனியாக தூதரகம் தேவை அது எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆப்கானிஸ்தானில் அட்டூழியம் நிகழ்த்தும் தலிபான்கள் பாமியான் நகரில் புத்தரின் சிலைகள், நினைவிடங்களை அழித்தது நினைவிருகட்டும். 2001-ம் ஆண்டு தலிபான்கள் நடத்திய வெறியாட்டத்துக்கு உலகளவில் இருந்து பெரும் கண்டனங்கள் குவிந்தன.
ஆதலால், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு அங்கீகரித்தால், அது தீவிரவாதத்தை வளர்க்க உதவுவதாக அமையும்.
இவ்வாறு விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
ஆனால், தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிப்பதா அல்லது மறுப்பதா என்பது குறித்து இதுவரை இலங்கை அரசு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒரே ஒரு ஊழியர் மட்டும் காபூல் ஹோட்டலில் தங்கியுள்ளார். ஏறக்குறைய 200 இலங்கை மக்கள் காபூலில் தங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.