உலகம்

ஆப்கனில் புதிய அரசு: முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

ஆப்கனில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தலிபான்கள் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஆப்கனில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
தலிபான்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கனின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கத்தாரிலிருந்து ஆப்கனுக்கு அவர் வருகை தந்திருக்கிறார். தலிபான்கள் அமைப்பின் துணை தலைவராக முல்லா அப்துல் கனி இருந்து வருகிறார். இதனிடையே புதிய அரசு அமைப்பது தொடர்பாக முந்தைய அதிபர் உள்ளிட்டோருடன் தலிபான்கள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கர்சாயுடன் முந்தைய அரசின் சமாதான தூதராக செயல்பட்ட அப்துல்லா அப்துல்லாவையும் சந்தித்து பேசியுள்ளனர்.

தலிபான்கள் சார்பில் அந்த அமைப்பின் மூத்த கமாண்டரும் ஹக்கானி தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவரான அனாஸ் ஹக்கானி கலந்து கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT