கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ | படம் உதவி ட்விட்டர் 
உலகம்

ஆப்கனில் தலிபான்கள் தலைமையிலான அரசை அங்கீகரிக்கமாட்டோம்: கனடா பிரதமர் திட்டவட்டம்

ஏஎன்ஐ


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையில் அமையும் அரசை அங்கீகரிக்கும் எந்தத் திட்டமும் கனடா அரசிடம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின், அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்ததை அறிந்த அதிபர் அஷ்ரப் கனி தஜிகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் விரைவில் ஆட்சி அமைப்பார்கள் என்று ெதரிகிறது.

கடந்த கால ஆட்சியைப் போல் அல்லாமல் இந்த முறை பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும், கல்வி கற்கலாம், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படும் என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தங்களால் எந்த அச்சுறுத்தலும் இருக்காது, தூதரகங்கள், சர்வதேச அமைப்புகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தலிபான்கள் தரப்பி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டில் உள்ள சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் “ ஆப்கானிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஜனநாயகரீதியான அரசை நீக்கிவிட்டு தலிபான்கள் ஆயுதங்கள் மூலம் ஆட்சியைப் பிடித்துள்ளார்கள்.

எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசை அங்கீகரிக்கும் திட்டம் ஏதும் கனடாவுக்கு இ்ல்லை. கனடாவின் சட்டங்களின்படி, தலிபான்கள் அறிவிக்கப்பட்ட தீவிரவாத குழுக்கள். எங்களின் நோக்கம் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் மக்களை பாதுகாப்பாக வெளிேயற்றுவதுதான். ஆதலால், விமானநிலையத்தில் காத்திருக்கும் மக்களை சுதந்திரமாக எங்கும் செல்ல தலிபான்கள் அனுமதிக்க வேண்டும்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்று ஆப்கானிஸ்தானை ஆயுதங்கள், அடக்குமுறை மூலம் தலிபான்கள் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்தார்கள். அப்போதுகூட கனடா தலிபான்களை அங்கீகரிக்கவில்லை, அவர்கள் அரசை வரவேற்கவும் இல்லை” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT