முறையற்ற வகையில் ஆப்கானிஸ்தான் மக்கள் குடியேறுவதைச் சமாளிக்க ஐரோப்பா திட்டமிட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கூறும்போது, “தலிபான்கள் ஆப்கானிஸ்தானைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனால் அங்கிருந்து முறையற்ற வகையில் மக்கள் குடியேறுவதைச் சமாளிக்க ஐரோப்பிய நாடுகள் திட்டமிட வேண்டும். ஐரோப்பிய நாடுகள் மட்டுமே தற்போதைய நிலைமையைச் சமாளிக்க முடியாது. பெரிய ஒழுங்கற்ற குடிப்பெயர்வுக்கு எதிராக நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிடமும் எனது திட்டத்தை முன்வைப்பேன். மேலும், ஆப்கன் நெருக்கடியைச் சமாளிக்க ஐ.நா. சபைக்கு அழைப்பு விடுத்துள்ளேன்” என்றார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கான் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.