ஆப்கன் விவகாரம் தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.
தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஆப்கன் மக்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றனர்.
ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் மலாலா உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிபிசி நேர்காணல் ஒன்றில் மலாலா பேசும்போது, “ஆப்கன் விவகாரத்தில் பைடன் நிறைய செய்ய வேண்டியுள்ளது. துணிச்சலாகப் பல முடிவுகளை அவர் எடுக்க வேண்டும். ஆப்கன் விவகாரம் தொடர்பாக உடனடி நடவடிக்கை வேண்டும் என உலகத் தலைவர்களைத் தொடர்புகொண்டு வேண்டுகோள் விடுத்து வருகிறேன்.
ஆப்கனில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாம் உடனடியாக உதவ வேண்டும். ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள், குழந்தைகளை நினைத்துக் கவலை கொண்டுள்ளேன். நான் ஆப்கனில் உள்ள பெண் உரிமை அமைப்புகளிடம் பேசினேன். அவர்களது அச்சத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆப்கன் அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
மலாலா
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயதுச் சிறுமியாக இருந்த அவரை கடந்த 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயர் தப்பினார் மலாலா.
உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்தார் மலாலா. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கும் மலாலா சொந்தக்காரர் ஆனார்.
இந்நிலையில் தற்போது ஐநா சபை, கடந்த 10 ஆண்டுகளில் உலகிலேயே மிகவும் பிரபலமான பதின்பருவத்தினர் என்ற விருதை மலாலாவுக்கு வழங்கி கவுரவித்துள்ளது.